முக்கிய செய்திகள்

தனக்கு மாரடைப்பு இல்லை: இன்சமாம் உல்-ஹக் விளக்கம்

Inzamam-ul-haq-2021-09-29

தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் வழக்கமான பரிசோதனைக்கு தான் மருத்துவரிடம் சென்றதாகவும் இன்சமாம் உல்-ஹக் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவமனையில்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 51 வயது இன்சமாம் உல்-ஹக், உடல்நலக் கோளாறு காரணமாக லாகூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்களின் ஆலோசனையின்படி அவருக்கு அவசரமாக ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்த அடைப்பு அகற்றப்பட்டது. 

டிஸ்சார்ஜ் ஆனார்...

சிகிச்சைக்குப் பிறகு இன்சமாம் நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதற்கிடையில் இன்சமாம் உல்-ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவருக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

அனைவருக்கும்... 

இந்த நிலையில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பரவிய தகவலை இன்சமாம் உல்-ஹக் மறுத்துள்ளார். இது குறித்து தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது., “பாகிஸ்தானிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். தங்கள் வாழ்த்துக்களை அனுப்பிய பாகிஸ்தான் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிசோதனை...

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை பார்த்தேன். எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. நான் ஒரு வழக்கமான பரிசோதனைக்காக என் மருத்துவரிடம் சென்றேன். அப்போது அவர் எனக்கு ‘ஆஞ்சியோகிராபி’ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். ஆஞ்சியோகிராபியின் போது, என்னுடைய ஒரு இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கவனித்தனர். எனவே அதனை சரி செய்ய ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. 

வேண்டுகோள்...

அந்த சிகிச்சை வெற்றிகரமாகவும் எளிதாகவும் முடிந்தது. நான் மருத்துவமனையில் 12 மணிநேரம் ஓய்வு எடுத்து பின்னர் வீடு திரும்பினேன். இப்போது நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறு இன்சமாம் உல்-ஹக் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில், இதய ஆரோக்கியத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் கூறுகையில், “நான் சிறிது அசவுகரியமான வலியை உணர்ந்ததால் தான் மருத்துவரிடம் சென்றேன். அந்த வலி என இதயத்தின் அருகில் கூட ஏற்படவில்லை, வயிற்றுப்பகுதியில் தான் ஏற்பட்டது. அதனை நான் உடனடியாக கவனித்திருக்காவிட்டால், எனது இதயம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். எனவே அனைவரும் கட்டாயமாக இதய ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று இன்சமாம் உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து