முக்கிய செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 'வழிகாட்டுதல்கள்' வெளியீடு: அனுமதி சீட்டு இல்லாமல் வாக்குச் சாவடியில் நுழைய தடை

Election-Commission 2021 09

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அனுமதி சீட்டு இல்லாமால் வாக்குச்சாவடியில் யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி சீட்டு பெற்றவர்களை தவிர வேறு யாரும் சாவடியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நேர்மையாகவும், அமைதியாகவும். வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஊாக உள்ளாட்சி அமைப்புகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு 06.10.2021 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 09.10.2021 அன்றும், காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும். அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், வாக்குப் பதிவு அமைதியாகவும், எவ்வித அச்சுறுத்தலும் இடையூறும் இன்றி முழு சுதந்திரத்துடன் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த ஒத்துழைக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது தொண்டர்கள், அனுதாபிகளிடையே ஏற்படும் மோதலையும், பதட்ட தவிர்க்கும் வகையில், அரசியல் கட்சிகளால் / வேட்பாளர்களால் வாக்குச்சாவடிகளுக்கு 200 மீட்டருக்கு அப்பால், அமைக்கப்படும் முகாம்களுக்கு அருகில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும். வாக்காளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி சீட்டு பெற்றவர்கள் தவிர வேறு எவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது,

தேர்தல் நடைமுறையை கண்காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் தொடர்பாக புகார் அல்லது பிரச்சினை ஏதுமிருந்தால் தேர்தல் தேர்தல் நடத்துவது தொடர்பாக பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வாக்குச்சாவடிக்கு சென்று வர வாக்காளர்களுக்கு இலவச பயணம் ஏற்பாடு செய்யும் வகையில் வேட்பாளரோ அவரது முகவரோ அல்லது அவர்களது ஒப்புதலோடு வேறு எந்த நபரோ வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதும், சொந்த வாகனங்களை பயன்படுத்துவதும் தமிழ்நாடு ஊராட்சி சட்டங்களின்படி (பிரிவு 68) தேர்தல் குற்றங்களாகும்.

ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு நாளன்று தமது சொந்த உபயோகத்திற்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவர் போட்டியிடும் பதவிக்கு தொடர்புள்ள பகுதியில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள தகுதியுடையவராவார். வேட்பாளர் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் வாகனத்தை வாக்குப் பதிவு நாளன்று வேறு எந்த நபரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இந்த வழிகாட்டுதல்களை மீறி பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். 

தேர்தல் பயன்பாட்டிற்கின்றி இதர நியாயமான பயன்பாட்டிற்கென கீழ்குறிப்பிட்டுள்ள வகையிலான வாகனங்களை வாக்குப் பதிவு நாளன்று இயக்க தடையேதும் இல்லை. தேர்தலுடன் சம்பந்தப்படாத சொந்த பயன்பாட்டிற்கு உரிமையாளர்களால் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்கள்,  

முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பலவீனமானவர்களை அழைத்து செல்லும் வாகனங்கள், மருத்துவமனை ஊர்திகள், அவசர ஊர்திகள், பால் வண்டிகள். தண்ணீர் வண்டிகள், அவசர மின் பணி ஊர்திகள், காவல் பணி, தீயணைப்பு பணி. தேர்தல் பணி போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள்,

வாகன உரிமையாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச் சாவடிக்குச் சென்று பயன்படுத்தப்படும் அவர்களது சொந்த வாகனங்கள் வாக்குச் சாவடி வளாக எல்லைக்குள் 200 மீட்டர் சுற்றளவுக்குள் செல்லக் கூடாது. 

வாக்காளர்கள். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்கள் / வாக்குச் சாவடி முகவர்களைத் தவிர, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் குறிப்பான மற்றும் முறையான அதிகாரபூர்வ கடிதம் அளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே எந்த வாக்குச் சாவடிக்குள்ளும் நுழைய முடியும். எந்த ஒரு அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் எந்த வாக்குச்சாவடிக்குள்ளும் வாக்காளராக நுழையலாம். ஆனால் அவர்  வாக்களிப்பதற்காக மட்டுமே செல்ல வேண்டும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர் என தீர்மானிக்கப்பட்டு அலுவல்சார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள எந்த ஒரு நபரும் வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி வளாக எல்லைக்குள் 200 மீட்டருக்குள் அவரது பாதுகாவலர்களுடன் நுழையக்கூடாது. அலுவல்சார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ஒரு நபர் வாக்காளராக இருக்கும் பட்சத்தில், தான் வாக்களிக்க செல்வதைத் தவிர, பாதுகாவலர்களுடனான தனது நடமாட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து