முக்கிய செய்திகள்

சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துள்ளது ஊழல் : சென்னை ஐகோர்ட் வேதனை

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவர் ரூ.1,500 லஞ்சம் பெற்ற புகாரில் பணி இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

முன்னதாக இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என்றும், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வும் வழங்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், லஞ்சம் பெறுவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து