முக்கிய செய்திகள்

சொத்துகள் அனைத்தும் ஆண்கள் பெயரில் தான் இருக்க வேண்டுமா? - பிரதமர் மோடி கேள்வி

Modi 2020 12 14

Source: provided

புதுடெல்லி : அனைத்து சொத்துக்களும், வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன, இதில் சில மாற்றம் தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் 'ஆசாதி75 - புதிய நகர்ப்புற இந்தியா மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது:

அனைத்து சொத்துக்களும் வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன. இதில் சில மாற்றம் தேவை. இதன் மீது மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கை மூலம் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் அல்லது கணவன்-மனைவி இருவரையும் உரிமையாளர்களாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அன்னை பாரதிக்கு மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைக்கப்பட்டிருப்பது எனது நினைவில் நிலைத்துள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகரங்களில் 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அவற்றில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டு ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வலுவான வீடுகள் இல்லாமல் சேரிகளில் வசித்த 3 கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நாட்டில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் விலையை உங்களால் யூகிக்க முடியும். இந்த மக்கள் லட்சாதிபதிகளாகியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் தற்போதைய ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகளில் இருந்த அரசுகள், திட்டங்களை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தினர்.

18,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆனால் அப்போது 18 வீடுகள் கூட கட்டப்படவில்லை. யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன மற்றும் 14 லட்சம் வீடுகள் கட்டும் பணி தற்போது பல நிலைகளில் உள்ளன. இந்த வீடுகளில் நவீன வசதிகள் உள்ளன.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளது.

எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1000 கோடி சேமிக்கின்றன. தற்போது, இந்த தொகை, இதர வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி. விளக்குகள், நகரங்களில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளது.

தொழில்நுட்பம் காரணமாக, நகர்ப்புறங்களில் கடந்த 6-7 ஆண்டுகளில், மிகப் பெரிய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து