முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்கிம்பூர் சம்பவத்தில் தேடப்பட்ட மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் தப்பி ஓட்டம் ?

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீஸார் சம்மன் அனுப்பியும் மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவசர அவசரமாக மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரக் கோரினர். ஆனால், இதுவரை அவர் விசாரணைக்குச் செல்லவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இதற்கிடைடேய ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உ.பி. போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், “மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து போலீஸார் விசாரித்து அவரைக் கண்டுபிடித்து அழைத்துவர வேண்டும். இதுவரை கலவரம் தொடர்பாக இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகக் கோரி அவரின் வீட்டு முன் போலீஸார் நோட்டீஸ் மட்டும் ஒட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து