முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் முகாம்களில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் : 24 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் செலுத்த அரசு ஏற்பாடு

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் முகாம்களில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 24 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் செலுத்த தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசியும் இன்றைய முகாமில் போடப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு முகாம்கள் மூலம் இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்படுவதால், இதனைத் தொடர்ந்து நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

4 வாரமாக நடைபெற்ற முகாம்கள் மூலம் சுமார் 80 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்று 5-வது முறையாக தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் இதுவரையில் தடுப்பூசி போடாத தகுதியுள்ள பொதுமக்கள் பங்குபெற அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது., 5-வது கட்டமாக இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலெக்டர்கள் மூலம் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளது. எந்தெந்த பகுதிகளில் முகாம்கள் நடைபெறுகின்றன என்ற விவரங்களை அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். இன்று நடைபெறும் சிறப்பு முகாமிற்கு 48 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. இந்த முகாம்களில் 2-வது தவணை போட தவறிய 24 லட்சம் பேர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை இந்த முகாம்களுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் சுகாதாரத்துறை செய்துள்ளது. தேவையான அளவு தடுப்பூசி இருப்பு இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசியும் இன்று நடக்கும் முகாம்களில் போடப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. ஒரு முகாமில் 4 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அதன்படி மொத்தம் 12 ஆயிரம் பேர் இந்த சிறப்பு முகாம்களில் பணியாற்றுகிறார்கள். இது தவிர பிற துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் தடுப்பூசி போடாத மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து