முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹவாய் தீவில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

ஹவாயிலுள்ள கடற்கரை பகுதியில் 6.1 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹவாயின் தீவிலுள்ள கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் நாலேஹுவுக்கு தெற்கே 17 மைல் தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.

பிறகு, சுமார் 20 நிமிடம் கழித்து அதே பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவதாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கின. அப்பகுதியின் வீட்டிலுள்ள பொருட்கள் கீழே விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முதல்கட்ட தகவலின் படி எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

காங்கோவில் 160 பேர் பலி

ஆப்பிரிக்காவின் காங்கோவில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் அதிகமானோர் நீரில் முழ்கினர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 61 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

ஆஸ்திரிய பிரதமா் விலகல்

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் பதவி விலகியுள்ளார். கடந்த 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை, செபாஸ்டியன் கா்ஸின் மக்கள் கட்சிக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகளை வெளியிட பத்திரிகையொன்றுக்கு அரசுப் பணத்தை செலவிட்டு விளம்பரங்கள் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக, செபாஸ்டியன் உள்பட மக்கள் கட்சியின் பல்வேறு தலைவா்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அவருக்கு பதிலாக, தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் அலெக்ஸாண்டா் ஷாலென்பா்க் நாட்டின் புதிய பிரதமராகிறார்.

சீனாவில் கடும் வெள்ளம்

சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தம் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது. கனமழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு துயரத்தை சீனா சந்தித்திருக்கிறது. ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவின் காரணமாக நான்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அரசின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து