முக்கிய செய்திகள்

வீராங்கனை குத்தி கொலை

Agnes-Tiropr--2021-10-15

ஓட்டப்பந்தயத்தில் பல பதக்கங்களை வென்று குவித்த கென்ய வீராங்கனையை அவரது கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான ஆக்னஸ் டிரோப் (Agnes Tirop) உலகளவில் நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 முறை வென்கலம் வென்றுள்ளார். சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 30 நிமிடத்தில் ஓடி புதிய உலக சாதனை படைத்தார். ஐட்டென் (Iten) நகரில் கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஆக்னஸின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது கணவர் தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக அழுது கொண்டே கூறியுள்ளார். பெற்றோர் புகாரளித்ததை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்த போது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் ஆக்னஸ் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்தார். தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெற்றி பெறுவோம்: அசாம்

டி20 உலக கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதில், இந்தியா வரும் 24-ம் தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 18-ம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்நிலையில், டி20 உலக கோப்பையை நிச்சயம் வெல்வோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது., 

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அமீரகத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விளையாடி வருகிறோம். அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைமை எங்களுக்கு அத்துப்படி. எனவே, நாங்கள் டி20 உலக கோப்பையை நிச்சயம் வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அணிக்கு அமைச்சர் வாழ்த்து

இந்தியாவின் 11ஆவது தேசிய  ஜூனியர் மற்றும் சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மற்றும்  உத்திர பிரதேச மாநிலங்களில் வரும் 21ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு அணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சீனியர், ஜுனியர் வீராங்கனைகள்  36 பேருக்கான பயிற்சி முகாம், திருச்சி அண்ணா விளையாட்டரங்கில், செயற்கை ஆடுகளத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. 

இதையடுத்து வீராங்கனைகளை வாழ்த்தி, வழியனுப்பும் நிகழ்ச்சி திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 வீராங்கனைகளுக்கு சுமார்  ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான சீருடைகள் மற்றும் உபகரணங்களை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வாழ்த்தி, வழங்கினார்.

டென்னிஸ்: ராடுகனு விலகல்

இந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகனு.18 வயதே ஆன எம்மா ராடுகனு கனடாவில் பிறந்தவர் .ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன்  நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற  இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் வரும் 18 ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்க  இருந்த கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.  இது குறித்து அவர் கூறியுள்ளதாவது., துரதிருஷ்டவசமாக எனது போட்டி அட்டவணையில் நான்  சில மாற்றங்கள்  செய்யவேண்டியுள்ளது.இந்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெறும்  கிரெம்லின் கோப்பை தொடரில் நான் பங்கேற்கமாட்டேன். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் ரஷ்ய ரசிகர்கள் முன் விளையாடுவேன் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து