முக்கிய செய்திகள்

16-வது மாநகராட்சியாகுகிறது கும்பகோணம்: தமிழகத்தில் மேலும் 19 புதிய நகராட்சிகள் - அரசு அறிவிப்பு - மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை 139 ஆக அதிகரிக்கும்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
tamilnadu-assembly--2021-08

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சிகளையும், கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகவும் உருவாக்குவதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின்  எண்ணிக்கை 139 ஆக அதிகரிக்கும். 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவை கொண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளாக பிரிக்கப்படுகின்றன. அதன்படி தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் வளர்ச்சியை பொருத்து பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், தரம் உயர்த்தப்படுகின்றன. ஒரு சில பேரூராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாகவும் அறிவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சிகளையும், கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகவும் உருவாக்குவதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி, கும்பகோணம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு 16-வது மாநகராட்சியாக உதயமாகிறது. கும்பகோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டுகளும் வரையறை செய்யப்படுகிறது.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லாங்கோடு மற்றும் ஏழுதேசம் அடங்கிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு கொல்லங்கோடு நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் புஞ்சை புகளூர் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாக அறிவிக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாராமங்கலம், இடங்கணசாலை, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பொன்னேரி, கடலூர் மாவட் டம் திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டத்தில் பள்ளம்பட்டி, திருப்பூரில், திருமுருகன் பூண்டி ஆகிய பேரூராட்சிகள் 19 புதிய நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 139 நகராட்சிகளாக எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து