முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் அசத்திய ஓமன் : 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அல் அமீரத் : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. முதல் நாளான நேற்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். குறிப்பாக ஓமன் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் ஆசாத் வாலா, 56 ரன்கள் குவித்தார். சார்லஸ் அமினி 37 ரன்கள் சேர்த்தார். சேஸ் பாவ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனால் 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் அகிப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் அதிரடியாக ஆடி பப்புவா நியூ கினியா பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 

பந்துவீச்சாளர்கள் மாறி மாறி புதிய யுக்திகளை கையாண்டும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. துவக்க வீரர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தனர். 

ஜதிந்தர் சிங், 42 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். அகிப் இல்யாஸ், 43 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்கருடன் 50 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஓமன் பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து