முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று 6 - வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Ma Subramanian 2021 07 21

Source: provided

சென்னை : தமிழகத்தில் 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்களில் இன்று 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையமும் இணைந்து நடத்தும் எலும்புதானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சிபட்டறை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்தி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சந்தேகம் கிளப்புவது, வதந்தி பரப்புவது என்பது எளிதான விசயம். ஆனால், உண்மைத்தன்மையை கண்டுபிடித்து பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பதுதான் அவசியமான ஒன்று. நடிகர் விவேக் மரணமடைந்தபோது வதந்தியை பரப்பியதால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் ஒரு சிறிய தொய்வும் இருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

எனவே, எந்த செய்தியை கொண்டுபோய் சேர்ப்பதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைத்தன்மையை கொண்டுசென்றால்தான் ஆரோக்கியமாக இருக்கும். ஏற்கெனவே மாநில அரசு நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டதல்ல என்பதை விளக்கியிருக்கிறது. இதை மத்திய அரசும் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இச்செய்தி மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையைத் தரும். தடுப்பூசி செலுத்திக்கொள்வது தவறான விஷயம் அல்ல என்று முழுமையான அளவில் விழிப்புணர்வு ஏற்படும்.

தற்போது 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டியவர்கள் 57 லட்சம் பேர் இருக்கின்றனர். முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடத்தி அதிலேயேயும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் இம்முகாம்களைப் பயன்படுத்தி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

உலகம் முழுவதும் தொற்றின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 75 ஆயிரம் என்று உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் 45 ஆயிரம் அளவுக்கு ஒரே நாளில் உயர்ந்துள்ளது. சீனாவில் விமான நிலையங்களும், கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் தொற்றின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது எனக் கருதி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து தமிழர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து