முக்கிய செய்திகள்

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதி பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      இந்தியா
Selvaka-apati 2021 10 26

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான செல்வகணபதி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் அக்டோபர் 6-ம் தேதி முடிவடைந்தது. முன்னதாக புதிய எம்.பி.யைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையில் மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெறுவதில் போட்டி நிலவியது. ஆனால் பா.ஜ.க. தலைமை நேரடியாக முதல்வர் ரங்கசாமியிடம் பேசியதைத் தொடர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட்டது. மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் செல்வகணபதியை அதிகாரபூர்வமாகக் கட்சி மேலிடம் அறிவித்தது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாளான கடந்த மாதம் 22-ம் தேதி செல்வகணபதி மனுத்தாக்கல் செய்தார்.

அரசியல் கட்சியினர் யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் புதுவை மாநிலங்களவை எம்.பி.யாகப் போட்டியின்றி பா.ஜ.க. செல்வகணபதி தேர்வானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தேர்வான மாநிலங்களவை எம்.பி. சுஷ்மிதா தேவும் பதவியேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து