முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது : ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசு துறைகளில் நடைபெறும் ஊழல் மற்றும் சட்டவிரோதங்கள் குறித்து கண்காணிக்க சிறப்பு பறக்கும்படை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு அதிகாரிகள் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கும் போது தங்களது மூத்த அதிகாரிகளிடம் உரிய தகவல் வழங்க வேண்டும்.

மேலும் வீடு கட்டுவது, விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு உயர் அதிகாரிகளிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களின் கடமைகளை செய்ய உயர் அதிகாரிகள் யாரிடமும் பணமும், பொருளும் அல்லது வேறு ஏதேனும் பலனோ செய்யுமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது. பெரும்பாலான உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடும் கீழமை அதிகாரிகளை பாதுகாக்கும் வகையிலேயே செயல்படுகின்றனர். இதனால், அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றி தொடர்ச்சியாக ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளையின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் ஊழல் சீர்குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வேலை எளிதாக நடக்கிறது என்பதால், சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் என்று கவலை தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து