முக்கிய செய்திகள்

கனடா பாதுகாப்பு துறை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பெண் நியமனம்

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      உலகம்
Anita-Anand 2021 10 27

Source: provided

ஒட்டாவா : கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து அவர் மீண்டும் பிரதமரானார். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட  54 வயதான அனிதா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வழக்கறிஞரான அனிதா ஆனந்த், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

பாதுகாப்புத்துறை அமைச்சராவதற்கு முன்பு அனிதா ஆனந்த், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். முன்னதாக லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து