முக்கிய செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கை ஏற்பு: 90 ஆயிரம் மெ.டன் யூரியாவை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Central-government 2021 07

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90,000மெ.டன் இறக்குமதி யூரியாவினை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு  அக்டோபர் மாதம் 21-ம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து மத்திய அரசு 90,000 மெ.டன் யூரியா தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்சமயம் நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.747 லட்சம் எக்டரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 7.816 லட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா ( இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டி.ஏ.பி. உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு, அக்டோபர் மாதத்திற்கு யூரியா, டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெ.டன், 4,480 மெ.டன் மற்றும் 8,140 மெ.டன் ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெ.டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெ.டன் இறக்குமதி யூரியா தமிழகத்திற்கு வழங்க வேண்டியுள்ளது.

டி.ஏ.பி 45,150 மெ.டன் உரத்தேவைக்கு 4,480 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை 11,781 மெ.டன் டி.ஏ.பி. வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பொட்டாஷ் உரத்தின் அக்டோபர் மாத உரத்தேவை 31,700 மெ. டன்னிற்கு பொட்டாஷ் 8,140 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுநாள்வரை 14,456 மெ.டன் பொட்டாஷ் உரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழி செய்திடவும், தமிழகத்தில் உரத்தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு விவசாய பெருங்குடி மக்களின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உரத்துறை அமைச்சருக்கு கடந்த 21.10.2021 அன்று யூரியாவினை உரித்த காலத்தே வழங்கிடவும், 20,000 மெ.டன் டிஏபி மற்றும் 10,000 மெ.டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்து குறைவின்றி வழங்குமாறு கடிதம் எழுதினார். முதல்வரின் இந்த கடிதம் காரணமாக காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90,000மெ.டன் இறக்குமதி யூரியாவினை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் உர தயாரிப்பு நிறுவனங்களான ஸ்பிக் நிறுவனம் இதுநாள் வரை 25,212 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. எம்.எப்.எல். உர நிறுவனம் இது நாள் வரை 26,185 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் 10,000 மெ.டன் மற்றும் எம்.எப்.எல். உர நிறுவனம் 8,000 மெ. டன் யூரியாவினை வழங்கிட திட்டமிட்டுள்ளன.

காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4,000 மெ.டன் உரம் யூரியா ரயில் மார்க்கமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டி.ஏ.பி. உரம் :

டி.ஏ.பி. உரத்தினை முழுமையாக தேவைக்கேற்ப வழங்குவதற்கு காக்கிநாடா துறைமுகத்திற்கு 02.11.2021 அன்று வரவுள்ள இப்கோ டி.ஏ.பி உரம் 45,000 மெ.டன்னிலிருந்து அதிகளவில் தமிழகத்திற்கு டி.ஏ.பி. ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது. 

காம்ப்ளக்ஸ் உரம் :

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக இதர காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண்துறை ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இதன்படி, இதுநாள் வரை காம்ப்ளக்ஸ் உரம் 60,634 மெ.டன் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இப்கோ, கொரமண்டல், கிரீன்ஸ்டார், ஐபிஎல், மங்களூர் பெர்டிலைசர், ஸ்மார்ட்கெம் மற்றும் பாக்ட் உள்ளிட்ட முன்னணி உர நிறுவனங்களால் 45,000 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் வழங்கிட நடவடிக்கைகள் வேளாண்மைத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பொட்டாஷ் உரம்:

தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ள 27,000 மெ.டன் பொட்டாஷ் உரத்திலிருந்து அதிகளவில் தமிழகத்தில்  தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் வேளாண்மைத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் தனியார் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் தற்போது யூரியா 64,111 மெ., டன், டிஏபி 23,654 மெ. டன், பொட்டாஷ் 35,590 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,17,575 மெ. டன் உரங்கள் இருப்பில் உள்ளன.

அனுதினமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் உர இருப்பு மற்றும் நகர்வு பணிகள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டு தேவைப்படும் மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரத்தேவை தொடர்பான விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவில் உடனடி நடவடிக்கைகள் வேளாண்மைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து