முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி பட்டாசு குடோனில் தீவிபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் கடைவீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை மொத்தமாக வரவழைத்து கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார். 

நேற்று முன்தினம் மாலை மின்கசிவு காரணமாக பட்டாசு குடோன் தீ பிடித்து எரிய தொடங்கியது. குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் தீ மளமளவென அருகில் இருந்த பேக்கிரி, ரெடிமேட் கடைகளுக்கும் பரவியது. அப்போது பேக்கிரியில் இருந்த 5-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த பகுதியில் எரிமலை வெடித்து சிதறுவதுபோல் தீ பிளம்பாக காட்சியளித்தது.

தீ விபத்துகுறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தீ விபத்தில் சங்கராபுரம் மேட்டுதெருவை சேர்ந்த சையத்காலித் (வயது 22), ஷாஆலம் (24), ஷேக்பஷீர் (40), எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அய்யாச்சாமி உள்பட 6 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் சங்கராபுரம் எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த தமிழ்படைப்பாளர் சங்க தலைவர் அரங்கசெம்பியன் (65) என்பவரும் இறந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி, வானாபுரத்தை சேர்ந்த சஞ்சய் (18), கோவிந்தன் (29) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் வேலு, எம்.எல்.ஏ.க்கள் உதய சூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவிபத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து