முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் வெளிநாட்டு கரன்சிகள் பயன்படுத்த தலிபான்கள் தடை

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு கரன்சிகள் எதையும் மக்கள் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் திடீர் தடை விதித்துள்ளனர். அவ்வாறு பயன்படுத்துவோர் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தலிபான்கள் ஆட்சிக்குப் பின் மிக மோசமான சரிவை நோக்கிச் சென்று வரும் நிலையில் தற்போது வெளிநாட்டு கரன்சிகளையும் பயன்படுத்தத் தடை விதித்திருப்பது அந்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் சிக்கலாக்கும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. மக்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து, தங்கள் வீட்டில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களை விற்று செலவுக்குப் பணம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு கரன்சிகள் ஏதும் பயன்படுத்தத் தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர் என்று அல்ஜசிரா சேனல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் வெளியிட்ட அறிக்கையில்,

அனைத்து மக்களும், கடை உரிமையாளர்களும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இது கண்டிப்பான உத்தரவு. இதை மீறுவோர் தண்டனைக்குள்ளாவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.  

 

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கன் கரன்சியின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. ஆப்கானில் பெரும்பாலும் அமெரிக்க கரன்சிகள்தான் புழக்கத்தில் இருந்த நிலையில் திடீரெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆப்கானிஸ்தானுக்குத் தேவையான நிதியான 950 கோடி டாலர் உதவியை உலக வங்கி, சர்வதேச நிதியம் வழங்கவிடாமல் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியுதவி நிறுத்தத்தால் ஆப்கானிஸ்தான் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து