முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சருக்கு 14 நாட்கள் சிறை: மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக். வயது 71. மும்பை நகரின் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பிர் சிங், உணவகங்கள், ஓட்டல்களிடம் இருந்து, மாதம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரும்படி அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இது தொடர்பாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநில ஆளுநர் கோஷ்யாரி ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதை அடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், உள்துறை அமைச்சர் பதவியை, அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், அனில் தேஷ்முக்கிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ம் தேதி கைது செய்தனர். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணைக்கு அனில் தேஷ்முக் ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரை விசாரிக்க வேண்டி உள்ளதால், அனுமதி தர வேண்டும் எனவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

 

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அனில் தேஷ்முக்கை, நீதிமன்றக் காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதற்கிடையே, இது தொடர்பான வழக்கில், அனில் தேஷ்முக்கின் மகன் ஹிருஷிகேஷூக்கு அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு ஆஜராகக் கோரி புதிய சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து