முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல் சின்னம்: தமிழகத்திற்கு நாளை முதல் 2-நாட்கள் 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 8 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி (நாளை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வழுவடைந்து வட தமிழ்நாடு நோக்கி நகரக்கூடும். வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வரும் 11-ம் தேதி தமிழ்நாடு அருகே வரும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் நாடு - புதுச்சேரிக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.  இது தொடர்பாக ஊடகத்துக்கு பேட்டியளித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்ஜய் மஹாபாத்ரா, கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் 9-ம் தேதி (இன்று) உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11-ம் தேதி காலை வட தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று தெரிவித்தார்.

இதனால் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்த அவர், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி பயணிக்கும் போது வரும் மழையின் அளவு 12ம் தேதி குறையும். மீனவர்கள் 9ம் தேதிக்குள் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனிடையே, நவம்பர் 10-ம் தேதி (நாளை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஏனாம் பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து