முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பேபி அணை' பகுதியில் மரங்களை வெட்ட தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து: கேரள அரசு நடவடிக்கை

திங்கட்கிழமை, 8 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

'பேபி அணை' பகுதியில் மரங்களை வெட்ட தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை கேரள அரசு ரத்து செய்துள்ளதுடன், இந்த அனுமதியை வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

முல்லைப்பெரியாறில் உள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்காக, அந்த அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு கேரள வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இந்த அனுமதிக்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதினார். 

ஆனால் இந்த விவகாரம், கேரளாவில் சர்ச்சையாக மாறி இருக்கிறது. ஏனென்றால், கேரளாவின் கோரிக்கை முல்லைப்பெரியாறில் புதிய அணை வேண்டும் என்பதுதானே தவிர, பேபி அணையை பலப்படுத்துவது அல்ல. எனவே இது தொடர்பாக மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. இதைத்தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை வழங்கிய அனுமதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும் இந்த அனுமதியை வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவு வழக்கத்துக்கு மாறான ஒன்று எனக்கூறியுள்ள வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், இந்த உத்தரவை பிறப்பித்த முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் (வனவிலங்கு) தரப்பில் கடுமையான குறைபாடு உள்ளது எனக்கூறினார். முன்னதாக இந்த பிரச்சினை தொடர்பாக கொச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

 

பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்டித்தள்ளுவதற்கு அனுமதி அளித்தது பற்றி கேரள அரசுக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒரு நிலைமை என்றால் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில், இந்த முடிவு பற்றி முதல்-மந்திரி அலுவலகத்துக்கோ, நீர்ப்பாசனத்துறை மந்திரி அலுவலகத்துக்கோ அல்லது எனது அலுவலகத்துக்கோ எதுவும் தெரியாது. ஏதோ குளறுபடி நடந்துள்ளது. வெளியான செய்திகளில் இருந்து, மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் மரங்களை வெட்டித்தள்ளத் தொடங்கி விட்டனர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளிடம் நாங்கள் அறிக்கை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து