முக்கிய செய்திகள்

தமிழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி அமைச்சர் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      தமிழகம்
PTR-Palanivel 2021 08 08

தமிழகத்தில்  முதலீட்டை அதிகரிப்பதற்கும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும்  மத்திய அரசிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்த அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

நாட்டின் தொழில் முதலீடு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து மாநில முதல்வர்கள்  மற்றும் நிதியமைச்சர்களுடன் 15-11-2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்திய  ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக   தமிழக நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் கலந்து கொண்டார்.  

அப்போது கொரோனா பெருந்தொற்றின் சவாலை எதிர்கொண்ட போதிலும், வருவாய் வரவுகளை ஈட்டுவதிலும் தொழில் முதலீட்டிலும் தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதைக் குறிப்பிட்டார். தமிழக முதல்வர் தலைமையில்  நடைபெற்ற இரண்டு தொழில் முதலீட்டுக் கூட்டங்களில் 21,021 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் ஒரு லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான அனுமதிகளை ஒருங்கே பெறுவதற்கான தேசிய ஒற்றைச் சாளர இணையவழி அமைப்பினை  பாராட்டிய அமைச்சர், அனுமதிக்குப் பிந்தைய சேவைகளுக்காகவும் குறைதீர்ப்பு செயல்முறைக்காகவும் இந்த இணையதளத்தில் வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைத்தார். சில மத்திய சட்டங்களின் கீழ் அனுமதிக்கான காலவரம்பினை தற்போதைய நான்கு மாதங்களிலிருந்து  ஒரு மாத காலஅளவிற்கு குறைக்கப்பட வேண்டுமெனவும் மருத்துவ சாதனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி விரைவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களை விரிவுபடுத்துவதில் உள்ள இடையூறுகளுக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசின்  ஒத்துழைப்பை அமைச்சர் கோரினார். மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்திய விமானப் நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், அப்பகுதியில் கூடுதல் வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மதுரை விமான நிலையத்தினை  விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

நாட்டின்  பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சிறந்த சரக்கு பரிமாற்ற முனையமாக அமைவதற்கேற்ற திறனை பெருமளவில் கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். புறத் துறைமுக திட்டத்துடன்  தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்குவதற்கான பெருந்திட்டம் ஒன்றினை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு விரிவான தொகுப்பினை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  தொழிற்சாலைகளுக்கான தளவாடச் செலவினைக் குறைக்கும் வகையில் சென்னை - கன்னியாகுமரி சாலை முழுவதையும் எட்டு  வழிச்சாலையாக மேம்படுத்தவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிலுவையில் உள்ள 11 நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் மின் பகிர்மானக் கழகங்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்த  அமைச்சர், போதுமான அளவில் தொடர்ந்து நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும், ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியினை கொண்டு வருவதற்கான வழிவகைகைளை மேம்படுத்த உதவுமாறும் அவர் ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டார். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறனை எடுத்துரைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கு மேலும், ஊக்கமளிக்கும் வகையில், கடலில் காற்றாலை மின் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கை ஒன்றினை மத்திய  அரசு உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி மாநிலங்கள் கடன் பெறுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்றும், கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் திறனை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய வரம்புகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், வெளிநாட்டு நிதியுதவி வழங்கும் அமைப்பு ஒன்றிடமிருந்து  ஒரு மாநிலத்திற்கு ஆண்டுக்கு ஒரு திட்டம் என்ற கட்டுப்பாட்டினை நீக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்நடவடிக்கைகள் முதலீட்டினை ஈர்க்கும் முதன்மை மாநிலமாகக் கருதப்படும்  தமிழகத்திற்கு பயனளிக்கும் விதமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தரவினை அடிப்படையாகக் கொண்ட நிருவாகத்திற்கான முயற்சியினை ஆதரிக்கும் விதமாக வருமான வரி, ஆதார், கொரோனா பெருந்தொற்று போன்ற தகவல் தொகுப்புகளை மாநிலங்கள் அணுகுவதற்கேற்ப, தரவுப் பகிர்வு நெறிமுறையை உருவாக்குமாறு மத்திய அரசிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்திருப்பது, தேவை மற்றும் வழங்குதலின் நெகிழ்தன்மையை  ஒட்டி பொருட்களின் மீதான விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பொருளாதார  வளர்ச்சியில் ஏற்படும் பொதுவான மாற்றத்தினை ஆய்வு செய்வதற்கான  பொன்னான வாய்ப்பினை வழங்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். அமைச்சர்  தனது நிறைவு உரையில் பணிகளை ஒன்றிய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படும் என்பதை உறுதிப்படுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து