முக்கிய செய்திகள்

முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு: மயானப் பணியாளர்கள் இறக்க நேர்ந்தால் ரூபாய் 10 லட்சம் நிதி: தமிழக அரசாணை வெளியீடு

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
tamilnadu-govt-30-06-20212

கொரோனா காலத்தில் கடுமையான பணி செய்துவரும் மயானப் பணியாளர்கள் அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மிகஅதிக அளவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களன் உடல்களை அடக்கம் செய்வதில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடும் பணியாற்றியவர்கள் மயானப் பணியாளர்கள். மயானப் பணியாளர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஏற்கெனவே தமிழக அரசு கூறியிருந்தது.

இவர்களை உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது., மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவிக்கபடுகின்றனர். மத்திய அரசின் ஆணைப்படி, மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன்களப் பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து