முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      தமிழகம்
Weather-Center 2021 06-30

வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது., “வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாகத் தமிழகத்தில் இன்று வரை மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. காற்று அதிகம் வீசும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் என்பதால் ரெட் அலர்ட் (ரெட் அலர்ட் என்பது 20 செ.மீ. அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என்பதைக் குறிக்கும்) என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று மேலும் தெரிவிக்கையில். தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும். 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று மாலை முதல் மழை அதிகரிக்கும் என தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம்,  இது புயலாக மாறும் வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கையில்., இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து