முக்கிய செய்திகள்

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Vijaykanth 2021 11 03

Source: provided

சென்னை : நடைபெறவுள்ள கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா நோய்த்தொற்று காரணமாகத் தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்புத் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியிருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து