முக்கிய செய்திகள்

நிதி சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களை மூடுவதை கைவிடுங்கள் : தமிழக அரசுக்கு எடப்பாடி வேண்டுகோள்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : நிதி சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை தொடங்க உத்தரவிட்டார்.  இந்த அரசு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது. அம்மா சிமெண்ட் விற்பனைக்கு மூடு விழா செய்துவிட்டு, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன், வலிமை சிமெண்ட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த தி.மு.க. அரசு.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை முழுமையாகவே நிறுத்திவிட்டது இந்த தி.மு.க. அரசு.  அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா நடமாடும் மருத்துவமனைகளுக்கு மூடு விழா செய்து விட்டு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அம்மாவின் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு இல்லம் தேடி மருத்துவம் என்று இந்த அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. 

இப்போது நிதிச் சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களையும் மூட அரசு முடிவு செய்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன.  தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுக்கள் அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கின? என்று தெரியவில்லை. நிதி நிலைமையை மேம்படுத்தி, வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் இந்த அரசு, அம்மா அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து