முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொன்றது ஏன்? - கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொன்றது ஏன் என்பது குறித்து கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். பல இடங்களில் திருடியும் இதுவரை அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தோகூரில் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக வந்துள்ளனர். அப்போது போலீசார் வழிமறித்தபோது வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து சென்றிருக்கின்றனர். அதேநேரத்தில் வண்டியில் இருந்த 2 சிறுவர்களையும் ஆட்டை இறுக பிடித்துக்கொண்டு இருக்க கூறியிருக்கிறார்.

சுரங்கப்பாதையில் தண்ணீர் இருந்ததால் தப்பிச் செல்ல வழியில்லாமல் சிக்கிக்கொண்டனர். மணிகண்டனின் தாய்க்கு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் போன் செய்து தகவல் தெரிவித்ததால், கைதாகி சிறைக்கு சென்றுவிடுமோ? என மணிகண்டன் அச்சமடைந்துள்ளார். அப்போது தான் கல்லால் பூமிநாதனின் தலையில் தாக்கியும், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்தும் அவரது தலை, கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்ததும் மற்ற 2 சிறுவர்களும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். கொலை செய்த உடன் அதே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் தப்பிச் சென்றனர்.

மணிகண்டனின் உறவினர் ஒருவர் இறந்த துக்க காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால் செலவுக்காக ஒரு ஆட்டை திருடியிருக்கின்றனர். அந்த ஆட்டை கீரனூர் பகுதியில் ஒருவரிடம் மணிகண்டன் விற்றிருக்கிறார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேற்கண்ட தகவலை அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக போலீசார் கூறினர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கீரனூர் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் மணிகண்டன் (வயது 19) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பொருட்கள், அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மணிகண்டனோடு சேர்ந்து சிறுவர்களும் போலீசை தாக்கியுள்ளனர்.

சிறுவர்கள் மூவரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ததாக கூறுவது நம்பும் படி இல்லை என அரசியல் வட்டாரத்தில் கூறுவதாக கேட்கிறீர்கள். இந்த கொலை சம்பவத்தை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது. சப்-இன்ஸ்பெக்டரின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. முன்பக்கமாக அரிவாளால் வெட்டும்படி சம்பவம் நடைபெறவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவாக உள்ளது. அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் பின்னால் இருந்து அவர்கள் தாக்கியுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டரை பின்தொடர்ந்து வந்த ஏட்டுவின் வாகனம் பழுதாகவில்லை. வழி தெரியாமல் மாறி சென்றதால் அவர் வர தாமதமானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

பூமிநாதன் செல்போனில் பல போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததால் அந்த பயத்தினால் கூட அவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம். இந்த வழக்கில் கொலைக்கான தடயங்கள், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு எதுவும் இல்லை. எனினும், மணிகண்டன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பொதுவாக இரவு நேர ரோந்து பணியின் போது போலீசார் 2 பேராக செல்ல வேண்டும். தங்களுடைய பாதுகாப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு துப்பாக்கி கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை பாராட்டி டி.ஜி.பி. மூலம் நேரடியாக வெகுமதி வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணை திருப்திகரமாக உள்ளது. கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து