முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோந்து பணிக்கு செல்லும்போது காவலர்கள் துப்பாக்கியுடன் செல்ல டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டி.ஜி.பி சைலேந்திரபாபு பின்னர் செய்தியாளர்களுடன் பேசும்போது, ரோந்து பணிக்கு காவலர்கள் செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல அறிவுறுத்தப் பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் இரவு நகர்வலத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றபோது, நள்ளிரவு ஆடு திருடும் கும்பலால்  சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  கொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி, திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவரது படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்ளை சந்தித்தபோது அவர் கூறியதாவது, மறைந்த பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்ற கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம், உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது என காவல்துறையினருக்கு அறிவுரை  வழங்கியதுடன், மேலும், பூமிநாதனை கொலை செய்த கொலையாளியின் தாயாருக்கு போன் செய்து அறிவுரையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து