முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணி நூலிற்கான விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

துணி நூலிற்கான விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களிலே உள்ளது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு 120 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. முக்கியமாக, இந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு அதிரடியாக 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டித் தரும் டாலர் சிட்டி திருப்பூரில், நாட்டின் 60 சதவீத பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூல் விலை உயர்வினால் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களை முழுமையாக செய்து முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களை பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர். கடந்த ஓரிரு மாதங்களில் நூலின் விலையும், நவம்பர் மாதத்தில் முக்கியமான நூல் ரகங்களின் விலையும் உயர்ந்துள்ளது.  இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பதுக்கல், இறக்குமதி பஞ்சிற்கான வரி உயர்வு மற்றும் செயற்கை தட்டுப்பாடே என்று கூறுகின்றனர். நூல் விலை உயர்வினாலும், துணி உற்பத்திக்கான புதிய ஆர்டர் கிடைக்கப் பெறாததாலும், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் பல மாதங்களாக வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். 

ஆகவே  முக்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற முக்கிய சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது குறைகளைப் போக்க வேண்டும்.  இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப் பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், மூலப் பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து