முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் நடிகர் கமலுக்கு பெரியளவில் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

2 தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் நடிகர் கமலுக்கு கொரனாவால் பெரியளவில் பாதிப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரம் தங்கசாலை பகுதியில் நடைபெறும் 11-வது மெகா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். தடுப்பூசி செலுத்திய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் நேற்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 72 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். 2-வது மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

60 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கொரோனா தொற்று நேற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம். எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். கடந்த 7 நாட்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் கடந்த 7 நாட்களில் 2.84 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ரஷ்யாவில் 44 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த 7 நாட்களில் 2.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,739 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் நாட்டில் 30 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 1.11லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், தடுப்பூசி போடாத நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னையில் குடிசை பகுதிகள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் முக கவசம் அணிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆறுதல் அளிக்கும் விதமாக சென்னையில் உள்ள மால்களில் 51 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர். சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த பொதுமக்களை காப்பதற்காக அரசு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானலும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!