முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் உணவகம் என்ற பெயரில் உணவகம் திறப்பதா? - ஓ.பி.எஸ். கண்டனம்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். இது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு தலைமை மருத்துவமைகைளிலும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழை எளிய வெளிப்புற நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பயன் அடைந்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.

அம்மா உணவகம் என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு “கலைஞர் உணவகம்” என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களின் பேராதரவோடு அதிமுக தான் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. பணபலம், அதிகார பலம் 2-வது பட்சம். மக்கள் பலம் தான் முக்கியம். ஒரு தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் விரும்பி வாக்களிக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும்.  எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை முதல்-அமைச்சர் நடத்துவார் என நினைக்கிறோம் என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து