முக்கிய செய்திகள்

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
MODI 2021 11 28

Source: provided

புதுடெல்லி : கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எந்தவிதமான இடையூறும் இன்றி கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. 31 கட்சிகளின் சார்பில் 42 பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலா்த் ஜோஷி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

31 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். எந்தவிதமான இடையூறுகள், அமளி இல்லாமல் அவையை நடத்திச் செல்ல மாநிலங்களவைத் தலைவர், மக்களவை தலைவர் தயாராக இருக்கிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு அதிகமான முன்னுரிமை கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையேஇந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, கொரோனா விவகாரம், கொரோனாவி்ல் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசினோம். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டஅங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கொண்டுவர அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கிட வேண்டும், வேளாண் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மத்தியஅரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடியோ விவசாயிகளுக்கு சட்டங்களை புரியவைக்க முடியவில்லை என்றார். அதாவது இந்த சட்டம் புரியும் வடிவில் வேறுவடிவில் வரலாம் எனத் தெரிவித்தார்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜந்நாத் சிங், மத்தியஅமைச்கள் பியூஷ் கோயல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து