முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு : நிவாரண உதவிகளையும் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் தொடரும் வடகிழக்குப் பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்த 7-ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். 

இந்நிலையில்,  நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பத்மாவதி நகரிலிருந்து வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வரை 2 கி.மீ. நடந்தே சென்று வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார். 

திருவேற்காடு நகராட்சி, வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நிவாரண முகாமினை பார்வையிட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

அதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் கோவில் தெரு, காவலர் குடியிருப்பில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஆவடி மாநகராட்சி, ஸ்ரீராம் நகர் மற்றும் திருமுல்லைவாயல், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளம் தேங்கியுள்ள மழைநீரை இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

முதல்வர் நேற்று பார்வையிட்ட 4 இடங்களிலும் சாலை மற்றும் தெருக்களில் பெருந்திரளாக நின்றிருந்த பொதுமக்களிடம், மழைக் காலங்களில் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். 

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் செல்லும் வழியில், ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர், பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.  அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை முதல்வர் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து சென்னை, வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமையும் முதல்வர் பார்வையிட்டார். 

இந்த ஆய்வின்போது, அமைச்சர் சா.மு. நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, பெருநகர சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து