முக்கிய செய்திகள்

பாலியல் புகார் வழக்கு: வேறுமாநிலத்திற்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Supreme-Court 2021 07 19

பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி  தொடர்ந்த வழக்கை சுப்ரீம கோர்ட் தள்ளுபடி செய்தது.

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை தமிழகத்திற்கு வெளியே விசாரணைக்கு மாற்ற வேண்டுமென முன்னாள் சிறப்பு டிஜிபி  சுப்ரீம கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தன் மீதான பாலியல் வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடக்கவில்லை என்றும், இந்த வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற வேண்டும்  என்றும்,  சம்பந்தப்பட்ட அதிகார வரம்பில் இல்லாத விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகின்றது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழகத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் ஒருதலைபட்சமாக இருக்கும் என்றும் தனது தரப்பு வாதங்களை முழுமையாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு இருக்காது எனவும்  மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது  சுப்ரீம கோர்ட் நீதிபதி யு யு லலித், ரவீர்ந்தர பாட் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இந்த விவகாரத்தில் நாமக்கல் உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய நிலையில் விழுப்புரத்தில் மட்டும் வழக்கின் விசாரணை நடத்துவது என்பது அதன் அதிகார வரம்பிற்கு மீறியது எனவே இதனை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

ஆனால் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையில் எந்தவிதமான முகாந்திரமும் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை எனக் கூறிய நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். முன்னதாக தனக்கு எதிரான இந்த பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு ஏற்கனவே சுப்ரீம கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து