முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு 0.18 சதவீதமாக குறைந்துள்ளது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு 2010, 2011-ம் ஆண்டு 0.38 சதவீதமாக இருந்த தொற்று, இப்போது 0.18 சதவீதமாக குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக எய்ட்ஸ் நாளையொட்டி அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

தமிழகத்தில் எச்.ஐ.வி. என்கின்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  நம் மக்களிடம் எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை விளைவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  

இந்த ஆண்டின் மையக்கருத்து எச்.ஐ.வி./எய்ட்ஸுடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அத்துடன் எச்.ஐ.வி/எய்ட்ஸ், கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்பதேயாகும்.  

தமிழகத்தில் இத்தொற்றினைக் கண்டறிய 2,953 நம்பிக்கை மையங்கள் செயல்படுகின்றன.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணைகூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்படுகின்றன. தொற்றுள்ள பெற்றோரின் கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்றாமல் தடுக்க அனைத்துப் பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம், கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த, தொண்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் போன்ற தன்னலமற்றோரின் உண்மையான ஈடுபாடும் மாநில அரசுடன் இணைந்து ஒத்தாசை புரிகிறது.  இதன் காரணமாக, 2010, 2011-ம் ஆண்டு 0.38 விழுக்காடாக இருந்த தொற்று, இப்போது 0.18 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 

எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒதுக்கப்படக் கூடாது என்கிற உயரிய நோக்கில், அத்தொற்றால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய 25 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் தமிழக அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வைப்பு நிதியிலிருந்து வருகிற வட்டித் தொகையால் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாகும். இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பணமின்றி மருத்துவமனைக்குப் பயணம் செய்ய பேருந்து அட்டை வழங்கப்படுகிறது.  பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பைத் தளர்த்தி மாத ஓய்வூதியம் தரப்படுகிறது.  

நம் தாய்த் திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு  9-ம்  வகுப்பு, 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை விதைக்கும்விதமாக, தன்னார்வ குருதிக்கொடையை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் போட்டியும், இணையதள வினாடி-வினாப் போட்டிகளும் புதிய இந்தியா @ 75 என்கிற தலைப்பில் நடத்தப்பட்டு வருகின்றன. 

இத்தொற்று குறித்த விழிப்புணர்வை முழுமையாக மக்களிடம் ஏற்படுத்தி தமிழகத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்.  தொற்றுடன் வாழ்பவரை ஒதுக்கி வைக்காமல் உள்ளன்போடு நடத்தி அன்பையும், ஆதரவையும் அவர்களுக்கு அளித்து, நம்மில் ஒருவராக வாழ வைப்போம் என்றும் உறுதி பூண்டிட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எச்.ஐ.வி. உள்ளோரை அன்பால் அரவணைப்போம். ஆதரவுக் கரம் நீட்டுவோம். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து