முக்கிய செய்திகள்

ஒ.பி.எஸ்.,இ.பி.எஸ். இன்று மனுதாக்கல்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
EPS-OPS 2021 07 23

Source: provided

சென்னை : இன்று சனிக்கிழமை (4-ந்தேதி) அமாவாசை நல்ல நாளாக கருதப்படுவதால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், இன்று வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்தது.

பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இணைந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டே அ.தி.மு.க.வுக்கு உள்கட்சி தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். அப்போது கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தால் உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில அ.தி.மு.க. செயற்குழு கூட்டப்பட்டு கட்சி விதிகளில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்வார்கள் என்று செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

செயற்குழு முடிந்த மறுநாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை கழகம் வெளியிட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு பரிசீலனை 5-ந்தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுவை 6-ந் தேதி மாலை 4 மணிவரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 7-ந்தேதி தேர்தல் நடைபெறும். 8-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை (4-ந்தேதி) அமாவாசை நல்ல நாளாக கருதப்படுவதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து