முக்கிய செய்திகள்

தென்ஆப்பிரிக்கா உடனான டி-20 தொடர் ஒத்திவைப்பு: டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்கிறது பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      விளையாட்டு
India-team 2021 12 04

ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா - தெ.ஆ. இடையிலான டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். 

ஒமைக்ரான் வைரஸ்...

தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கொரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

சுற்றுப்பயணம்...

நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 17-ல் தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெறுகிறது. டிசம்பர் 8 அன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் செல்வதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பங்கேற்க மறுப்பு...

இங்கிலாந்தில் கொரோனா பயம் காரணமாக இந்திய அணி 5-வது டெஸ்டில் பங்கேற்க மறுத்தது. கடந்த வருடம் தென்னாப்பிரிக்க அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பியது. ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மறுத்தது. இந்தச் சூழலில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்டபடி தெ.ஆ. - இந்தியா தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. 

தொடர் ஒத்திவைப்பு...

இந்நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா - தெ.ஆ. இடையிலான டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். எனினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்கச் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து