முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடி நாள் நிதிக்கு மக்கள் தங்களது பங்களிப்பை அளிக்க கவர்னர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவர்னர் வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தி வருமாறு., தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக முப்படை வீரர்கள் திகழ்கிறார்கள். முப்படை வீரர்களுடைய குன்றாத விசுவாசமும் கடமையில் காட்டும் உண்மையான அர்ப்பணிப்பும் இந்தியாவை வலிமையுள்ள தேசமாக மாற்றியுள்ளது.

வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரங்கள், இயற்கையின் சீற்றம் போன்றவற்றினை தீரமுடன் எதிர்கொண்டு தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் வீரர்கள் ஆற்றிய தியாகம் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அவர்களுடைய இளமைக் காலத்தையும், வாழ்க்கையின் சிறந்த காலத்தையும் நாட்டிற்காகவே அர்ப்பணித்து சேவையாற்றி ராணுவத்திலிருந்து விடைபெறும் போது நம்முடைய நன்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்க வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் கொடி நாள் நிதிக்கு கணிசமாகப் பங்களிப்பதற்கு மக்களுக்குப் பொன்னான வாய்ப்பை அளிக்கும் வகையில், டிசம்பர் மாதம் 7-ம் நாள் முப்படை வீரர்களுக்கான கொடி நாளாகக் கொண்டாடப்பட்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தமிழக மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறும் அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெல்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து