முக்கிய செய்திகள்

9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு: மொத்த பலி எண்ணிக்கை 4,73,537 ஆக அதிகரிப்பு

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      இந்தியா
corona- 2021 11 25

கடந்த ஒரு வாரத்தில் 9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 161 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 211 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,537 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,450 பேர் அடங்குவர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரத்து 561 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 1.5 சதவீதம், மகாராஷ்டிராவில் 15 சதவீதம், தமிழ்நாட்டில் 2.8 சதவீதம் உள்பட நாடு முழுவதும் புதிய பாதிப்பு சராசரியாக 3 சதவீதம் குறைந்துள்ளது.

அதேநேரம் கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது அம்மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 2,499 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 2,001 பேர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தெலுங்கானாவில் ஒரு வார பாதிப்பு 1,059-ல் இருந்து 1,329 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு வார பாதிப்பு 200-ல் இருந்து 492 ஆகவும், குஜராத்தில் 202-ல் இருந்து 309 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 50-ல் இருந்து 101 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் கோவாவில் 50 சதவீதம், சிக்கிமில் 122 சதவீதம், ஜார்க்கண்டில் 12 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 10 சதவீதம் என மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஒரு வாரத்தில் புதிய பாதிப்பு சற்று உயர்ந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 161 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 211 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,537 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து மேலும் 8,834 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 69 ஆயிரத்து 608 ஆக உயர்ந்தது. தற்போது 98,416 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 44,110 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் ஒரேநாளில் 24,55,911 டோஸ்களும், இதுவரை 127 கோடியே 93 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒரேநாளில் 8,86,263 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 64.82 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து