முக்கிய செய்திகள்

குஜராத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, உறவினருக்கு கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      இந்தியா
Corona-infection 2021 12 06

Source: provided

காந்தி நகர் : ஜிம்பாப்வேயிலிருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி, உறவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விருவரின் மாதிரிகளும், கொரோனா வைரஸ் மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜாம்நகர் மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தவருக்கு கடந்த 4-ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்திருந்தது.

இந்த நிலையில், தற்போது, அவருடன் ஜிம்பாப்வேயிலிருந்து வந்த அவரது மனைவி மற்றும் ஜாம்நகரில் வசித்து வரும் மனைவியின் சகோதரருக்கு ஞாயிறன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதர குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலிருந்து யாரும் செல்ல வேண்டாம் என்று தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் வசிப்போர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் 21 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குஜராத்துக்கு வந்த 72 வயது வெளிநாடு வாழ் இந்தியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது மாதிரிகள் மரபணு வரிசைமுறை சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜாம்நகரைச் சேர்ந்த இவர், கடந்த பல ஆண்டுகளாக ஜிம்பாப்வேயில் வசித்து வருகிறார். அவர் தனது மாமனாரை சந்திக்க வந்தபோது ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து