முக்கிய செய்திகள்

பேரறிவாளன் வழக்கில் கவர்னர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      இந்தியா
Perarivalan-2021-12-07

பேரறிவாளன் வழக்கில் கவர்னரின் முடிவு என்ன என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பேரறிவாளன் வழக்கு தொடர்பான கோப்புகள் மீது முடிவெடுக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்  பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார். அப்போது, இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நெடு நாட்களாக பேரறிவாளன் விவகரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், பேரறிவாளன் வழக்கு தொடர்பான கோப்புகள் மீது முடிவெடுக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும் மாநில அரசின் தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.  மீண்டும் இவ்வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் இழுத்தடிக்கப்படுவதால், இறுதி முடிவு வரும் வரை பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரினார். இதனை பரிசீலிப்பதாக கூறிய நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் கோப்புகளின் நிலவரம் என்ன என்பது தொடர்பாக காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து