முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மதுரை, நெல்லை புதிய பஸ் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நெல்லை புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், தஞ்சை பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம், மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாக துறை சார்பில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இவற்றில் நெல்லை பேருந்து நிலையித்தின் பணிகள், 110 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்திருக்கிறது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் 14.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம் 14.44 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது. மதுரை பேருந்து நிலையம், 12.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ளது.

இவற்றில் நெல்லையை பொறுத்தவரை, அங்கு புதிய பேருந்து நிலைய விரிவாக்கம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சந்திப்பு ரெயில் நிலையம் அருகே மூன்று அடுக்குகளைக் கொண்ட இரண்டு சக்கர வாகன நிறுத்தம், புதிய பேருந்து நிலையத்தில் அறிவியல் பூங்கா உள்பட 110.19 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்துள்ளது. இவற்றில் புதிய பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகளை கவரும் வகையிலும் அறிவியல் திறனை வளர்த்துக்கொள்ளும் அளவில் அறிவியல் தொடர்பான கருவிகள், படங்கள், ராக்கெட் வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா அமைந்துள்ளது, இதுபோன்று நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று, அங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை, அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,289 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சை பழைய பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, காமராஜர் சரபோஜி மார்க்கெட், ஐயன் குளம், சாமந்தன் குளம் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பலகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இவற்றில் தஞ்சை ஐயன் குளம் மற்றும் சாமந்தன் குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. ஏற்கனவே அங்கு உள்ள 96 கடைகளும் ஏலம் விடப்பட்ட நிலையில் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுவே மதுரையில் கடந்த 2018 இறுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது. பின் 175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும், 450 கடைகள் இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தின் தரை தளத்தின் கீழே 2 அடுக்குகளில் 5000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகள் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் கட்டமைக்கப்படுகின்றன.

போலவே மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆலோசனையின்படி பெரியார் பேருந்து நிலைய கட்டிடங்களில் பிரம்மாண்ட தமிழி எழுத்துக்களும், மாமதுரை போற்றுவோம் என்ற தலைப்பில் கண்கவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக நாட்டார் தெய்வங்களின் படங்கள், நாட்டுப்புற கலைகளின் படங்கள் வண்ண ஓவியங்களாக படைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து