முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்ததில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மனைவியுடன் பலி

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் பலியாயினர். மேலும், அதில் பயணம் செய்த 11 பேரும் உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகள் கூட்டம்...

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டெல்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் ராணுவ அதிகாரிகள் வந்து பயிற்சி அளிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று (டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

கடும் மேகமூட்டம்...

ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் இருந்த சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த கொண்டிருந்தது. பிற்பகல் 12:40 மணியளவில் அங்கு கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. காலை முதலே அந்த பகுதியில் பனிமூட்டமான சூழல் நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. 

மீட்பு பணியில் தாமதம்... 

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துகுள்ளான செய்தியை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் ஆகியோர் சென்று மீட்பு பணிகளை விரைவுப்படுத்தினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார்கள்.

விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்:

  • 1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.
  • 2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி).
  • 3. பிரிகேடியர் லிடர்.
  • 4. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்.
  • 5. குர்சேவர் சிங்.
  • 6. ஜிஜேந்தர் குமார்.
  • 7. விவேக் குமார்.
  • 8. சார் தேஜா.
  • 9. கவில்தார் சத்பால்.

மற்றும் விமானிகள் குழுவை சேர்ந்த 5 பேர் இருந்துள்ளனர்.

அவசர ஆலோசனை... 

இதற்கிடையே விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு, விமானப்படை உத்தரவிட்டுள்ளது. மேலும், விபத்து தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனையில் நேற்று ஈடுபட்டனர். 

அடையாளம் காண்பதில்... 

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக 6 மணி நேரத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. மேலும், விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

விமானப்படை அறிவிப்பு...

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை விமானப்படை தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

காயங்களுடன் ஒருவர் மீட்பு...

இது தொடர்பாக விமானப்படை வெளியிட்ட டுவீட்டில், நேற்று நண்பகலில் ஐ.ஏ.எப் எம்.ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர் முப்படைகளின் தளபதி உள்ளிட்ட 9 பேருடன் புறப்பட்டது. ஹெலிகாப்டரை இயக்கும் குழுவில் 4 பேர் இருந்தனர். மொத்தம் 14 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தமிழகத்தின் குன்னூரில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் சீனியர் கமாண்டர், காயங்களுடன் வெல்லிங்கடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தலைவர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்குகள் நடைபெறும்.

தேர்ந்த அனுபவம்...

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். வெலிங்டனில் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி, தேர்ந்த அனுபவத்தை பெற்றார்.

முதல் தலைமை தளபதி...

பிபின் ராவத். காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பிபின் ராவத், அங்கு படைகளுக்கு தலைமை தாங்கினார். படிப்படியாக இந்திய ராணவத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரித்த பிபின் ராவத், கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார். தற்போது முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இந்தியாவின் முதல் தலைமை தளபதியாக இருந்து வந்தார்.

ஹெலிகாப்டர் வகை...

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், இந்திய விமானப் படையைச் சேர்ந்த எம்ஐ-17வி5 வகையைச் சேர்ந்தது. இது ரஷ்ய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான கஸன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை ஹெலிகாப்டர்களில், உள்ளே உயரதிகாரிகள் அமர்ந்து செல்வதற்கான தனிப்பகுதியும், வெளியே, பாதுகாப்புக் கலணையும் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. எம்ஐ-17வி5 வகை ஹெலிகாப்டர்கள், உலகளவில், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தைக் கொண்ட போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். 

6 முறை விபத்து...

எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை விபத்துக்குள்ளானது. 2013 ஜூன் 25, 2016 அக்டோபர் 19, 2017 அக்டோபர் 6, 2018 ஏப்ரல் 3, 2019 பிப்ரவரி 27, 2021 டிசம்பர் 8 (நேற்று) விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிபின் ராவத் - முக்கிய தகவல்கள்

  • * தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமியில் மாணவராக பயிற்சி பெற்றவர் பிபின் ராவத்.* தந்தை பணியாற்றிய அதே பிரிவில் 1978-ஆம் ஆண்டு பிபின் ராவத் ராணுவத்தில் இணைந்தார்.
  • * படைப்பிரிவின் தளபதி, கமாண்டிங் இன் சீப், தெற்கு கட்டளை அதிகாரி, உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை பிபின் ராவத் வகித்துள்ளார்.
  • * கர்னல் ராணுவ செயலாளர், ராணுவ இணைச் செயலாளராகவும் பிபின் ராவத் பணியாற்றியுள்ளார்.
  • * ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையிலும் பிபின் ராவத் அங்கம் வகித்துள்ளார்.
  • * வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகள், இந்திய – சீன எல்லைப்பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றிய அனுபவம் பிபின் ராவத்திற்கு உண்டு.
  • * ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் 27 வது தலைமை தளபதியாக டிசம்பர் 31, 2016 முதல் பொறுப்பேற்றார்.
  • * பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடையும் அன்று முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.
  • * முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்ட பிறகு முதல் நபராக பிபின் ராவத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
  • * பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

விபத்தில் இருந்து தப்பியவர்

பிபின் ராவத் ஏற்கெனவே 2015-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் தற்போது பலரால் நினைவுகூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி வந்தார். கடந்த 2015 பிப்ரவரி 3-ம் தேதி பிபின் ராவத் உள்பட 3 ராணுவ உயரதிகாரிகள் நாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

அந்த ஹெலிகாப்டர் தரையில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பறந்த போது, திடீரென எஞ்சின் செயல்பாடு நின்று போனது. இதனால் ஹெலிகாப்டர் வேகமாக தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவாமாக உயிர் தப்பினர். இந்த விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி அதில் இருந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து