முக்கிய செய்திகள்

இன்னும் 8 விக்கெட் தான் தேவை: கபில்தேவ் சாதனையை முறியடிக்க தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      விளையாட்டு
Ashwin 2021-12-

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அஸ்வின் கபில்தேவின் சாதனையை முறியடித்து 2-வது இடத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல சாதனைகள்...

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த 35 வயதான அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி தொடரில் 14 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். இந்த தொடரில் அஸ்வின் பல சாதனைகளை புரிந்தார். டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 3-வது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்கை முந்தினார். சொந்த மண்ணில் 300 விக்கெட்டை தொட்டார். ஒரு ஆண்டில் அதிக முறை 50 விக்கெட்டுக்கு மேல் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 9-வது தடவையாக தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

434 விக்கெட்கள்... 

இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் கும்ப்ளே. சுழற்பந்து வீரரான அவர் 132 போட்டியில் 619 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அதற்கு அடுத்த படியாக வேகப்பந்து வீச்சாளரான கபில்தேவ் 434 விக்கெட் (131 டெஸ்ட் ) கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார். தற்போது கபில்தேவின் சாதனையை நோக்கி அஸ்வின் செல்கிறார். அதற்கு அவருக்கு இன்னும் 8 விக்கெட் தான் தேவை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அவர் கபில் தேவின் சாதனையை முறியடித்து 2-வது இடத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது இடத்தில்... 

அஸ்வின் 81 டெஸ்டில் 427 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார். ஒரு இன்னிங்சில் 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதும் , டெஸ்டில் 140 ரன் கொடுத்து 13 விக்கெட் கைப்பற்றியதும் அவரது சிறந்த பந்து வீச்சாகும். 30 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் அவர் வீழ்த்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அஸ்வினுக்கு ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து