முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

வெள்ளிக்கிழமை, 10 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் 30 ஆண்டுகால நல்லாட்சி காலத்திலும், குறிப்பாக, 2011 முதல் 2021 வரை நடந்த அம்மாவின் ஆட்சி மற்றும் அம்மாவின் அரசிலும் நேர்மையான அரசு அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கொள்ளை அடிக்கும் ஆளும் கட்சியினர் மீது, சட்டபூர்வமாக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தங்களுக்கு சாதகமாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை, எனது அறிக்கைகளின் வாயிலாக அடிக்கடி சுட்டிக் காட்டி உள்ளேன்.

ஆனாலும், தி.மு.க. அரசின் ஆட்சியில், தொடர்ந்து அதிகாரிகள், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களால் மிரட்டப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், கல்குவாரிகளில் முறைகேடாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளம் கடத்தப்பட்டுள்ளதை கண்டறிந்து இந்த கடத்தலில் ஈடுபட்ட ஆளும் தி.மு.கவினருக்கு சுமார் 20 கோடி ரூபாய் அபராதம் விதித்த சப்-கலெக்டர், லாரிகளை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும், கடத்தல் கும்பல்களின் செல்வாக்கால், மாவட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் அழுத்தத்தினால், கடந்த வாரம் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம் மற்றும் இருக்கன்குடி பகுதிகளில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. இதில் தி.மு.க. பிரமுகர்களுக்கு சொந்தமான குவாரிகளில், புவியியல் துறையில் பெறப்பட்ட நடை சீட்டு (பெர்மிட்) அளவைவிட, அதிக அளவு கனிமங்கள் வெட்டி கடத்தப்படுவதாக அரசு துறைகளுக்கு புகார்கள் வந்தன.

பொதுமக்கள் அளித்த புகாரின்படி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, கடத்தல் லாரிகளை கனிமங்களோடு பறிமுதல் செய்த தோடு, பினாமி பெயர்களில் நடத்தும் குவாரிகளுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இதன் காரணமாகவே சப்-கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன

இதுபோல் தமிழ்நாடு முழுவதும், இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தைரியமாக ஒருசிலர் அளித்த புகார்கள் மீதோ, அல்லது நடைபெற்ற சம்பவங்கள் மீதோ இந்த அரசு இதுவரை எந்த விதமான விசாரணையையும் மேற் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

இதனால் தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒருவித அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து