முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100 கி.மீதொலை இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில், கடற்பகுதியில் 18.5கி.மீ ஆழத்தில் நேற்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு ( உள்ளூர்நேரப்படிகாலை 11.20 மணி ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளி என ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் “ ப்ளோரஸ் கடற்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும். இந்த அலைகள் 1,000 கி.மீ சுற்றளவில் எழக்கூடும்”என எச்சரித்தது.

ஆனால், இந்தோனேசியா புவிவியல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், " ப்ளோரஸ் தீவை மையமாகக் கொண்டு கடற்பகுதியில் 12 கி.மீ ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேற்று காலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்பதால் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். நிலநடுக்கத்தை மையமாக வைத்து 1000 கி.மீ பரப்பளவுக்கு மோசமான சுனாமி அலைகள் உருவாகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் உள்ள தெற்குப்பகுதி மக்களில் 2.1 கோடி மக்கள் இந்த நிலநடுக்கத்தை லேசாக உணர்ந்தனர் என்றும், 3.47லட்சம் பேர் ஓரளவுக்கு உணர்ந்ததாகவும், 2 ஆயிரம் பேர் தங்கள் வீடுகள் குலுங்கின, நிலஅதிர்வை அதிகமாக உணர்தோம் எனத் தெரிவித்ததாக அமெரிக்க புவிவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகளில் சிக்கி, 1.70 லட்சம் பேர் உயிரிழந்தனர். 2018-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் ஹாலிடே தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில்சிக்கி 550க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். சுலாவசி தீவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 4.300 பேர் வரை காணாமல்போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு பாதிப்பில்லை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் நிலவியது. இதுதொடர்பாக இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் கூறும்போது, ‘இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை’ என்று தெரிவித்தது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.3 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக ஏற்பட்ட சுனாமி இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து