முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

முன்னதாக கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார். அவர் பேசுகையில், இந்த அரசாங்கம் எப்போது தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம். இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. அதற்கு ஜெயா ஜெட்லி தலைமை வகிக்கிறார். நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். 

இந்நிலையில் இந்தக் குழு தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கியது. அதில் 21 வயதில் திருமணம் நடந்தால்தான் பெண்களால் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று தற்போது 21 வயதாக திருமண வயதை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியாக அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறார் திருமண சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இனி இது பாராளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும்.

இதற்கான பரிர்ந்துரையை டிசம்பர் தொடக்கத்தில் செயற்குழு சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. அதில், பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் அவளின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும் அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து