முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தடையை மீறி போராட்டம்: அ.தி.மு.க.வினர் 67 ஆயிரம் பேர் மீது வழக்கு

சனிக்கிழமை, 18 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வினர் 67 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மேலும் பல கோரிக்கைகளை நிறைவேற்றகோரியும் அ.தி.மு.க. சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டனர்.  சென்னையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், ராயபுரம், கலெக்டர் அலுவலகம் அருகே, வேளச்சேரி உள்ளிட்ட 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னையில் 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக 2,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு பிறகு 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை நீடிக்கிறது. இந்த தடையை மீறி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கு போடப்பட்டுள்ளது. 

இதே போன்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்டவர்களும், மேலும் சில மாவட்டங்களில் 1000 பேர் வரையிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.  இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு..க. முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் 950 பேர் மீதும், தென்காசி, நெல்லையில் 700 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.  கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4,620 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!