முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நட்பு நாடுகளிடம் கூறப்பட்டுள்ளது : அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆயுதங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் தெரிவித்து விட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற தொழில் வர்த்தக சம்மேளன மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

இந்தியாவின் புவிசார் சூழலை பார்க்கும்போது, இந்தியாவுக்கு நல்லது நடந்து விடக்கூடாது. இந்தியா முன்னேறி விடக்கூடாது. இந்தியா வளர்ச்சியடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் சிலநாடுகளை இந்தியாவைச் சுற்றி கடவுள் படைத்து விட்டார். இந்தியாவிலிருந்து பிரிந்து ஆனால் இந்தியாவின் வளர்ச்சி குறித்து கவலைப்படும் நாடாக அவை அமைந்து விட்டன.

எனவே, நாட்டின் பாதுகாப்பு கருதி ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நட்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, இந்தியாவுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை நட்பு நாடுகளுக்கு இந்தியா தெளிவாக உணர்த்தியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யுங்கள் என கூறியுள்ளோம். இதை நட்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

நட்பு நாடுகள் இந்தியாவில் கூட்டாக ஆலை அமைப்பது அல்லது தனிப்பட்ட முறையில் ஆலை அமைப்பதை இந்தியா வரவேற்கிறது. ஆனால் ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.  இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 209 பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாட பொருட்களின் எண்ணிக்கை விரைவிலேயே 1,000-ஐ எட்டும்.

அரசு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டிசூழல் நிலவ வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்கேற்ப இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ராணுவ தளவாடம் மற்றும் ஏரோஸ்பேஸ் சந்தையின் மதிப்பு ரூ.85 ஆயிரம் கோடி. இது அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து