முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் இருக்கும் 69 தமிழக மீனவர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை : மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசு தொடர்பு கொண்டு 69 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.  இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

இரண்டு நாட்களில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டெல்லியில் நேற்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது.,

டிசம்பர் 18 மற்றும் 20ம் தேதிகளுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதற்கு நாங்கள் கவலைப்படுகிறோம். எங்கள் தகவலின்படி, 68 மீனவர்கள் மற்றும் 10 படகுகள் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட  ஒரு மீனவர் விஷயத்தில், இந்திய தூதரக அதிகாரி மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலனைப் பரிசோதித்துள்ளார். இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான நடவடிக்கையை கொழும்பில் உள்ள எங்கள் தூதரக உயர் அதிகாரிகள் இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் தமிழக முதல்வரும் கோரிக்கை விடுத்தார். தற்போதைய சூழ்நிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் அனைவருக்கும் எடுத்துரைத்துள்ளார். மீனவர்கள் விரைவாக விடுப்பு தொடர்பான தற்போதைய சூழல் மற்றும் நடவடிக்கை தொடர்பாக அவர் அவர்களிடம் தெளிவுபடுத்தி உள்ளார். இவ்வாறு தமது பேட்டியின்போது  மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசினர். தமிழக மீனவர்களை விடுதலை செய்யவேண்டுமென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு அரசியம் கட்சியினரும் மீனவர்கள் விடுதலை தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து