முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகமெடுக்கும் ஒமைக்ரான் பரவல்: தலைநகரில் கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை

புதன்கிழமை, 22 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், டெல்லியில் பொது இடங்களில் கிறிஸ்துமஸ், கலாச்சார நிகழ்வுகள் நடத்தத் தடை விதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி மாநில அரசு அதிகாரிகளும், டெல்லி காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம் பணித்துள்ளது. மேலும், மாவட்ட அளவிலான அலுவலர்கள் அன்றாட தொற்று தொடர்பான அறிக்கைகளை அரசுக்கு சரியான புள்ளிவிவரங்களுடன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் வருவதைத் தடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 213 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இல்லாத அளவுக்கு அதிகம். முன்னதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், மாநிலங்கள், யூனியன்கள் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்குமாறு கூறியிருந்தார். மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்துமாறும், ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்யுமாறும் குறிப்பிட்டிருந்தது.

தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு, குறுகிய அளவிலான கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தது. பரிசோதனைகளை அதிகரிக்கவும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்ற கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 125 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கொரோனா இரண்டாவது அலையின்போது டெல்லியில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மாநில அரசு குற்றஞ்சாட்டியது. டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றம் தலையிட்டு பல உத்தரவுகளைப் பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து